ஞாயிறு, 13 டிசம்பர், 2015

செம்பரம்பாக்கம் ஏரி - வரமா? சாபமா?

தமிழக அரசியல் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது...

செம்பரம்பாக்கம் ஏரியை மையம்கொண்டு!


ஊடகங்களில் தொடர்ந்து அடிபடும் ஒரு பெயராக மாறிவிட்டது இந்த ஏரி.

கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி, பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில், அடையாற்றங்கரையில் பயணித்தோம், நானும் பொறியாளர் மு.இரமணி அவர்களும்.


அதோ மேற்கே சுமார் ஒரு கி.மீ.தூரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி.

சாலையில் நாங்கள் காரை நிறுத்திய இடத்தில், நீரை அளக்கும் ஒரு அளவுகோல் நடப்பட்டிருந்தது. ஏரியில் தண்ணீர் இவ்வளவு தூரம் வருமா? யோசித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன்.


வயல் வரப்புகளின் வழியே நடந்து கொண்டிருந்தபோது திடீரென கால்வாய் ஒன்று குறுக்கிட்டது. ஒரே ஜம்ப். குதித்துத் தாவினேன்.

குறுக்கிடும் தார் சாலையைக் கடந்ததும் செம்பரம்பாக்கம் ஏரி.

மதகுகளில் அருகிலேயே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகமாக ஏறத் தொடங்கினேன்.

அதற்கும் முன்பாகக் குறுக்கிட்டது, கன்னியம்மன் ஆலயம்.



ஆம், ஏரிக்குள் பாதாளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கோயில். இறங்கிச் செல்வதற்கும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.

கோயிலுக்கு வெளியே இருந்த கம்பியில் நூற்றுக்கணக்கான வண்ண வண்ணத் துணிகள். வேண்டுதலுக்காக மக்களால் சுற்றப்பட்டிருந்தன.

நீரிடந் தெய்வம். வணங்கத்தக்கதுதான்!

மேல்தளத்துக்குச் சென்றபோது பிரம்மாண்டமான செம்பரம்பாக்கம் ஏரி, என் கண்முன் விரிந்துக் காணப்பட்டது.


இந்த ஏரி வெட்டப்பட்டக் காலம் தெரியவில்லை. பல்லவர் காலத்தியதாக இருக்கலாம்?
இதன் பரப்பளவு 6,250 ஏக்கராகும். இதில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் மூலம் 50ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடலாம்.

இன்றைய அணைக்கட்டுகளுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி.

சென்னை மக்களின் தாகத்தைத் தணிக்கும் நீராதாரங்களில் ஒன்று.

கண்டலேறு அணையில் இருந்துத் திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதிநீரின் ஒரு பகுதி, பூண்டி அணையில் இருந்துக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியை அடைகிறது.

இங்கிருந்து வெளியேறும் உபரிநீரானது அடையாற்றில் கலந்து குன்றத்தூர், திருநீர் மலை, மணப்பாக்கம், ராமாபுரம், ஜபார்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக வங்காள விரிகுடாவை அடைகிறது.

ஏரியில் இருந்து வெளியேறும் நீர் செல்வதற்கானத் தடம்?

வரும் வழியில் நான் தாண்டி வந்ததாகச் சொன்னேன் அல்லவா, அந்தக் கால்வாய் தான் இந்நீர்வழித் தடம்.

சரி, அடையாற்றுடன் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டுமா கலக்கிறது?

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 96 ஏரிகளில் 50 ஏரிகளின் உபரி நீரும், பாப்பான் கால்வாய், திருமுடிவாக்கம், ஊரப்பாக்கம், மணப்பாக்கம் கால்வாய்களும் அடையாற் றுடன் இணைகின்றன.       

2015 டிசம்பர் 1ஆம் தேதியன்று என்ன நடந்தது?

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 35ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.

இதனால் அன்றைய தினம் காலை 10ஆயிரமும், பிற்பகல் 20ஆயிரமும், இரவு 35ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அதே நேரம் அடையாற்றுடன் இணைக்கப்பட்டிருந்த ஏரிகளில் இருந்து 32ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேறியது.

இந்த ஆற்றின் கரைகள் 60 மீட்டர் அகலம் கொண்டவை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 10 மீட்டராகச் சுருங்கிவிட்டது.

அடையாற்றைப் பொறுத்தவரை 60ஆயிரம் கனஅடி வரை தண்ணீரைத் தாங்குமாம்!

ஆனால் ஒரே நேரத்தில் 67, 70ஆயிரம் கனஅடி என்றால் அதுவும் சுருங்கியக் கரைகளைக் கொண்டு, எப்படித் தாங்கும்?

அடையாற்றில் கரைபுரண்டோடிய வெள்ள நீர், சென்னையைச் சுற்றியுள்ள சுமார் 80 கி.மீ. சுற்றளவில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வெளியேறிய நீர் என்கின்றன பத்திரிகைச் செய்திகள்.

ஆனாலும் சென்னையின் சேதத்துக்குச் செம்பரம்பாக்கம் ஏரிதான் காரணம் எனத்  தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

சென்னை மக்களின் வரமாக இருந்த இந்த ஏரி, இப்போது சாபமாக மாறிவிட்டது.



இதற்கெல்லாம் இங்கு உறையும் கன்னியம்மன்தான் பதில் சொல்ல வேண்டும்..!

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

தாதாபுரம்

முதலாம் இராஜராஜன்–சோழப் பரம்பரையின் பெயரையும், புகழையும் பன்மடங்கு உயர்த்தியவன். தமிழ் மண்ணின் பெருமையை உலகளவில் அறிய வைத்தவன்.

இந்த மாமன்னனின் பெயரால் அமைந்த ஊர்தான் இராஜராஜபுரம்.

திண்டிவனம் வட்டத்தில் வெள்ளிமேடுப்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கிராமம், எப்போது தாதாபுரமானது என்று தெரியவில்லை.

சுந்தரச் சோழரின் மகளும், இராஜராஜனின் தமக்கையாருமான குந்தவை, இவ்வூரில் இரவிகுல மாணிக்க ஈச்வரம் எனும் சிவாலயத்தையும், குந்தவை விண்ணகர் ஆழ்வார் எனும் திருமால் கோயிலையும், குந்தவை ஜினாலயம் எனும் சமணக் கோயிலையும் கட்டியிருக்கிறார். 

இப்போது சமணக் கோயிலை அங்குக் காண முயவில்லை.

பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் இறைவன் கரிவரதப் பெருமாள் என்றழைக்கப் படுகிறார். 

சிவாலயம் மணிக்கண்டேசுவரம் என்றழைக்கப்படுகிறது. (இரவிகுல மாணிக்கம் என்பது இராஜராஜ சோழனின் விருதுப் பெயர்களில் ஒன்று.)

இக்கோயில்கள் அரும்பெரும் கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கின்றன.

சிவாலயம் புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது. 



திருப்பணிகளை மேற்கொள்ளும் நல்ல உள்ளங்களுக்காக காத்து நிற்கிறார்கரிவரதப் பெருமாள் 
 

வெள்ளி, 4 டிசம்பர், 2015

பனைமலை ஓவியம்

இன்றைக்குச் சரியாக நூறாண்டுக்கு முன்பு, 1905 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வந்த பிரெஞ்சுப் பேராசிரியரும், சென்னை தொல்லியல்துறை கண்காணிப்பாளருமான ழுவோ துப்ராய் அவர்கள், அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார்.

அங்கிருக்கும் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக்கிறது. ஏற்கனவே, 1890இல் பனைமலைக் கோயிலின் சமஸ்கிருதக் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார்.

இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜசிம்மன்தான், பனைமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான்.

பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலை தாளகிரீசுவரர்க் கோயிலையும், அங்குள்ள ஓவியத்தையும் வெளியுலகுக்குக் கொண்டு வந்தது.

பனைமலைக் கோயிலின் வடக்கு சிற்றாலயத்தில், இடம்பெற்றுள்ள ஓவியம் அழகானது.

மகுடம் தரித்தத் தலைக்கு மேல் வண்ணக் குடை, ஒரு கால் தரையில் ஊன்றியிருக்க மற்றொரு காலை மடித்து தலையை சாய்த்து, அழகிய அணிகலன் களுடன் காட்சித் தருகிறாள் உமையம்மை. (இவ்வோவியம் பல்லவனின் அரசியாகிய அரங்க பதாகை என்போரும் உண்டு)

எதிர்ச் சுவற்றில் சிவபெருமானின் சம்ஹார தாண்டவம். அதனை இரசிக்கும் பார்வதி. இப்படியாக உருப்பெற்றுள்ளது இந்த ஓவியம்.

சிவனின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலும் சிதைந்துவிட்ட நிலையில், பார்வதி தேவியின் ஓவியம் மட்டும் ஓரளவு நின்றிருக்கிறது.

பனைமலை ஓவியம், தென்னிந்திய ஓவியக் கலை மரபில் அஜந்தா எல்லோராவுக்கு அடுத்த நிலையில் இருப்பது. தமிழகத்தில் எஞ்சி நிற்கும் பல்லவ ஓவியம். இலங்கை சிகிரியா மலைக் குன்றில் உள்ள ஓவியங்களுடன் ஒப்பிடக் கூடியது.



இவ்வோவியத்தின் சிறப்பு குறித்து ஆய்வாளர்கள் பலரும் வரலாற்றில் பதிவு செய்துள்ளனர்.

பனைமலை ஓவியத்தின் மாதிரி பிரதி ஒன்று, சென்னை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருப் பதாகச் சொல்லியிருக்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

சென்னை அருங்காட்சியகத்தில் ஓவியர் இரவி வர்மா உள்ளிட்டோரின் ஓவியங்கள் காட்சிப்படுத் தப்பட்டுள்ளன. மகிழ்ச்சிதான்.ஆனால், பனைமலை ஓவியப் பிரதி எங்கே?

அண்மையில் இரண்டுமுறை சென்னை அருங்காட்சியகத்துக்குச் சென்ற நான், பனைமலை ஓவியப்பிரதி குறித்து கேட்டபோது, அங்கிருந்தவர்கள் உதட்டைப் பிதுக்கியதுதான் பதிலாக வந்தது. அது எங்கிருக்கிறதோ யாருக்குத் தெரியும்? 

பாரீசு நகரத்து லூவர் அருங்காட்சியகத்துச் சென்றிருந்த விமர்சகர் ஓவியர் கவிஞர் இந்திரன், அங்கிருந்த மோனோலிசா ஓவியம், குண்டு துளைக்காத கண்ணாடிகளின் பல்வேறு அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டு வருவதைப் பார்த்து வியந்தார்.

இதற்கும் பல நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணில் தீட்டப்பட்ட ஓவியங்களையும் செதுக்கப்பட்டச் சிற்பங்களையும் எத்தகைய பாதுகாப்பற்ற நிலையில் நாம் வைத்திருக்கிறோம் என்றெண்ணி வேதனைப்பட்டாராம்.

கலையுலகில் மோனோலிசா மிகவும் புகழப்படுகிறாள். 
உச்சி முகர்ந்துப் பாராட்டப்படுகிறாள். இருக்கட்டும்.  

மோனாலிசாவை விட பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவள், ஆனால் இன்றும் இளமையாய் இருப்பவள், அழகானவள் எங்கள் உமையம்மை. இப்படி நாங்கள் இறுமாந்துச் சொல்லலாம். இதில் உண்மையும் நியாயமும்கூட இருக்கிறது.

ஆனால் பாதுகாப்பும் இல்லை. பராமரிப்பும் இல்லை. அந்த வடக்குச் சிற்றாலயத் துக்குப் பூட்டுக்கூட கிடையாது. தமிழ்நாட்டில் வாயில்களைப் போல் திறந்தே கிடக்கிறது. இதன் அருமை குறித்துச் சொல்வதற்கும் அங்கு ஆள் கிடையாது.


ஒருவேளை பிரெஞ்சுக்காரர்கள் செஞ்சியில் இருந்ததைப் பெயர்த்தெடுத்துச் சென்றதைப் போல, பனைமலை ஓவியத்தையும் எடுத்துச் சென்று பாரீசு அருங்காட்சியகத்தில் வைத்திருந்தால், மோனோலிசாவைவிட உமையம்மைக்குப் பல அடுக்குப் பாதுகாப்புத் தரப்பட்டிருக்கும்- தமிழனின் ஓவியக் கலையும் உலகளாவியப் பெருமையும் அடைந்திருக்குமோ?  

பல்லவரின் முதற்குடைவரை

உலகில் தோன்றுபவை எல்லாம் ஒருநாள் அழியக்கூடியதே. 
இதுதான் இயற்கை. ஆனால் அழியாத உடல் வேண்டும், அழியாதப் புகழ் வேண்டும் என்பதை மனிதன் மனம் நாடுகிறது.
இப்படித்தான், காலத்தாலும் அழியாமல் இருக்கும் ஒன்றை, தான் உருவாக்க வேண்டும் என ஒருவன் விரும்பினான். அதன்படியே செய்தான்.
அவன் உருவாக்கியது என்னவோ காலத்தால் அழியாதக் கட்டடத்தை. ஆனால் விசித்திரம் பாருங்கள் அவன் விரும்பாமலேயே, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கூட, வரலாற்றில் அவனும் இதுநாள் வரை நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறான்.
கி.பி.7ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கோயில்கள் எல்லாம் செங்கற் களைக் கொண்டுதான் கட்டப்பட்டு வந்தன. சுண்ணாம்பு, மரம் மற்றும் உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதில் மாற்றம் வேண்டுமே! யோசித்தான் விசித்திர சித்தன்.
இதற்கு வடிவம் கொடுக்க அவன் தேர்வு செய்த இடம், தற்போது விழுப்புரம் அருகே உள்ள மண்டகப்பட்டு கிராமம்.
ஏத த நிஷ்ட மத்ரும மலோ
ஹ மசுதம் விசித்திர சித்தநே
நிர்ம்மா பித ந்ருபேண ப்ரஹம
ச்வர விஷ்ணு லக்ஷிதாய நம்
செங்கல், மரம், சுண்ணாம்பு, உலோகம் இல்லாமல் பிரம்மா ஈஸ்வர விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தனால் இக்கோயில் எழுப்பப்பட்டதைத் தெரிவிக்கிறது இங்குள்ள மேற்காணும் பல்லவ கிரந்தச் சாசனம்.


பிரம்மாண்ட ஒற்றைப் பாறை, நேர்த்தியாகக் குடையப்பட்டுள்ளது. குடைந்தெடுத்தச் சிற்பிகளின் கரங்களுக்கு நமது வணக்கங்கள்.
இக்கோயிலில் தற்போது மும்மூர்த்திகளின் உருவங்கள் இல்லை. ஆனால், அவை இருந்ததற்கானத் தடயங்கள் இருக்கின்றன. 
வாயிலின் இருபுறமும் உயர்ந்த உருவத்துடனும் நளினத்துடனும் துவார பாலகர்கள். கோயிலுக்கு எதிரே பரந்து விரிந்துக் காணப்படும் ஏரி.
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மாமன்னன் மகேந்திரவர்மனால் மண்டகப்பட்டு கிராமத்தில் ஏற்படுத்தப்பட்ட இக்குடைவரை, தமிழகக் கோயில் கட்டடக் கலை வரலாற்றில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் தொடக்கமாகும்.
சித்திரகாரப் புலி, மத்த விலாசன், லளிதாங்குரன், அவனி பாஜனன், மகா மேகன், கலகப் பிரியன் என்றெல்லாம் மகேந்திரவர்மன் புகழப்பட்டதில் வியப்பேதுமில்லை.

மண்டகப்பட்டு : விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்திலிருந்து 18ஆவது கி.மீ.இல் அமைந்துள்ளது.