திங்கள், 27 ஜூன், 2016

அவசியம் தேவை :அருங்காட்சியகம்

வரலாற்றுத் தொன்மையும் பெருமையும் கொண்டது விழுப்புரம் மாவட்டம்.
மண்ணுக்குள் புதையுண்டிருக்கும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டுமே? இதற்காக அரசு சார்பில் அருங்காட்சி யகம், மாவட்டத் தலைநகரில் அமைக்கப்பட வேண்டும் என்பது என்னைப் போன்றோரின் நீண்ட நாள் கனவு.
இதனை வலியுறுத்தி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பேசியும், எழுதியும் வருகிறேன்.
இந்தக் கனவு நனவாகும் வாய்ப்பு, 2005இல் ஏற்பட்டது.
ஆம், அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இதுபோன்ற விசயங்களில் மிகவும் ஆர்வத்தோடு இருந்தார்.
அவரிடம் அருங்காட்சியக விவகாரத்தை எடுத்துச் சொன்னேன். “ஆமாம். அவசியம் தேவைதான்என ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பான அடிப்படை விவரங்களுக்காக என்னை கடலூர் அரசு அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தார்.
நான் அங்கு சென்று வந்தபிறகு, கடலூர் காப்பாட்சியர் திரு.காளத்தி விழுப்புரம் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.
இதற்கிடையே பொதுமக்களிடமிருந்து கோரிக்கைப் பெறப்பட வேண்டும் என்று கல்வெட்டாய்வாளர் திரு.அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி யோசனை தெரிவித்தார்.
இதன்பேரில் மனுவொன்று தயார் செய்து, விழுப்புரத்தில் இயங்கிவரும் இலக்கிய, வரலாற்று அமைப்புகளைச் சேர்ந்த 15 பேரிடம் கையொப்பம் பெற்றேன்.
இந்த மனுவானது 02.08.2005இல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. 



இதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அருங்காட்சியகம் தொடர்பானக் கருத்துரு அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், விழுப்புரத்தில் காலியாகக் கிடக்கும் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக அருங்காட்சியகத்தினை அமைத்துவிடலாம் என்பது மாவட்ட ஆட்சியரின் யோசனையாக இருந்தது.
13.08.2005 அன்று விழுப்புரத்தில் நடந்த ஆட்சிமொழிக் கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் திரு.சி.வி.சண்முகத்திடம் மாவட்ட ஆட்சியர் இதுபற்றி எடுத்துச் சொன்னார். அமைச்சரும் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.
“விழுப்புரம் திரு.வி.க. வீதியில் தாலுகா அலுவலகம் இயங்கிவந்த இடத்தில் தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்படும்எனும் அறிவிப்பினையும் அமைச்சர் வெளியிட்டார்.



அரசின் உயரதிகாரிகள் எல்லாம் அந்த இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். வரைபடங்கள் எல்லாம் தயாராயின.
வெண்ணெய் திரண்டு வந்த இந்த நிலையில்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அருங்காட்சியகப் பணிகள் முடங்கின. தேர்தல் முடிவில் ஆட்சி மாற்றம். ஆட்சியரும் மாற்றம்.
தாழி உடைந்தது. கனவும் கனவாகவே இருக்கிறது.
சரி, மீண்டும் முயற்சிக்கலாமே நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
மேற்கண்ட முயற்சியில் இறங்கி, நான் எடுத்துக் கொண்ட சிரத்தை, அலைந்த அலைச்சல் சொல்லி மாளாது. இவை என்னைச் சோர்வடைய வைத்தன. ஆனாலும் தொடர்ந்தேன்.
அதனால்தான் அந்த மனுவைப் பெறும்போது மாவட்ட ஆட்சியர் கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். சொன்னார்,
“கண்ணகிக்குக் கோட்டம் அமைய சேரன் செங்குட்டுவன் எப்படி காரணமோ, அதுபோல் விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைந்தால் அதற்கு செங்குட்டுவன் காரணமாக இருப்பார்.
என்னுடைய உழைப்பை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர் எனும் காரணங்களினால் தான் ஆட்சியரிடமிருந்த இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்திருக்க வேண்டும்.
சரி, நான்தான் தொடரவில்லை. மற்றவர்கள் இவ்விவகாரத்தைத் தொடரலாமே?

இணைப்பில்:
04.08.2005 தினமலர் (புதுச்சேரி பதிப்பு)

21.08.2005 நம் தினமதி (திருவண்ணாமலை பதிப்பு)     

வியாழன், 28 ஜனவரி, 2016

விழுப்புரம் பஸ் ஸ்டேஷன்


‘வரலாம் வரலாம்... வா வா...- வாயில் விசில் வைத்தபடி கண்டக்டர் ‘ரைட் கொடுத்துக் கொண்டிருப்பார்.

பஸ், பின்னால் வந்து கொண்டிருக்கும். அப்போது டமாரென்ற சத்தம். அந்த பஸ் இன்னொரு பஸ்மீது மோதிவிட்டது.

அந்த டிரைவர் இறங்கிவர, இந்த டிரைவர் இறங்கிச்செல்ல அடுத்த சில நிமிடங்களில் அந்த இடம் போர்க்களமாகிவிடும்.

இது சினிமாக்களில் காட்டப்படும் காட்சிகளல்ல. விழுப்புரம் நேரு சாலையில் இயங்கிவந்த (பழைய) பேருந்து நிலையத்தில் அன்றாடம் நடந்து வந்த நிகழ்வுகள் தாம்.

90களின் தொடக்கத்தில் தினகரனில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டேன். தலைப்பு ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறார்கள்.

பேருந்து நிலையத்தின் கிழக்கில் உள்ளூர் பேருந்துகள். மேற்கில், தொலைதூரப் பேருந்துகள் நிற்கும் ‘திருவள்ளுவர் பஸ் ஸ்டான்டு.

இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. இந்தச் சிறிய இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பேருந்துகள் தினமும் வந்து சென்றிருக்கின்றன!

1930இல் விழுப்புரம் ஐயனார்க் குளக்கரைதான் மோட்டார் பேருந்துகள் (டிராம்) நிறுத்துமிடமாக இருந்தது. அப்போது இயங்கிய வண்டிகளின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்துதான்.

தொடர்ந்து 25.08.1951இல் ‘முனிசிபல் பஸ் ஸ்டேஷனுக்கு உள்ளூர் நிர்வாகத்துறை அமைச்சர் சந்திரமௌலி அடிக்கல் நாட்டியிருக்கிறார். அடுத்த சில மாதங்களில் நேரு சாலையில் இந்த நிலையம் இயங்கத் தொடங்கியிருக்கிறது.

அண்ணாவின் மறைவினைத் தொடர்ந்து 13.08.1969இல் பேருந்து நிலையத்திற்கு, ‘அறிஞர் அண்ணாதுரை நகராட்சிப் பேருந்து நிலையம்எனப் பெயர் சூட்டப்பட்டது.

80,90களில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் இடநெருக்கடியும் ஏற்பட்டது.

பேருந்து நிலையத்தை பூந்தோட்டம் ஏரிக்கு மாற்றுவதற்கு யோசிக்கப்பட்டது.

இதற்கிடையே 1991இல் ஏற்பட்ட அதிமுக தலைமையிலான அரசு, பூந்தோட்டம் குளத்தை பஸ்நிலைய விஸ்தரிப்புக்குப் பயன்படுத்தியது. ஆனால் இத்திட்டம் முழுமைப் பெறவில்லை.

இதற்கிடையே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையத்திற்கு 08.06.1998இல் நடந்த விழாவில், முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம் நகராட்சியின் புதிய பஸ்நிலையத்தை 09.06.2000இல் முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.

இப்போது பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது விழுப்புரம் புதிய பஸ் நிலையம்.

‘டமாரென்ற சத்தத்திற்கு எல்லாம் இங்கு இடமில்லை. ஆனால் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதங்கள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.


கேட்டால் ‘டைமிங் தகராறு என்கிறார்கள்..!  

செவ்வாய், 12 ஜனவரி, 2016

ஆற்றுத் திருவிழா இனி...

தென்பெண்ணையாற்றில் இனிமேல் தண்ணீரே வராது என முடிவு செய்துவிட்டார்கள் போலும். பாருங்கள், எவ்வளவு சேற்று மண் குவியல், ஆற்றுக்கு நடுவில்!

மழைக்காலங்களில் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளம் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கவும், தண்ணீரைத் தேக்கிவைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் முடிவு செய்தது பொதுப்பணித்துறை.

இதற்காக, விழுப்புரத்தையடுத்த பேரங்கியூர் – பிடாகம் இடையே தரைமட்டத் தடுப்பணைக் கட்டுவதற்கு கடந்த செப்டம்பரில் பூமி பூஜை போட்டுப் பணிகளையும் தொடங்கினர்.

740 மீட்டர் நீளம். 4 மீட்டர் அகலம். 8 மீட்டர் ஆழம். இதற்காக ரூ. 12 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு என்கிறது புள்ளி விவரங்கள்.

இவ்வளவுத் திட்டமிட்டவர்களுக்கு மழை வரும் என்பது தெரியாதா என்ன. ஏறக்குறைய 2 மாதங்களிலேயே தயாராகிவிட்டது தரைமட்டத் தடுப்பணை.

அதிகாரிகள் எதிர்பார்த்ததுபோல் வடகிழக்குப் பருவ மழையும் வெளுத்துவாங்கியது. சாத்தனூர் அணை திறக்கப்படாமலேயே தென்பெண்ணையாற்றின் இரு கரைகளிலும் புரண்டது வெள்ள நீர்.

2015 டிசம்பர் முதல் வாரம், மழையும் ஓய்ந்தது வெள்ள நீரும் ஓரளவுக்கு வடிந்தது.

அப்புறம்போய் பார்க்கும்போதுதான் தெரிந்தது, கட்டப்பட்டத் தடுப்பணை ஏறக்குறைய 20 மீட்டருக்கும் மேல் காணவில்லை. தடுப்பணைக்கு ஆதாரமாகப் போடப்பட்டிருந்த கருங்கற்களும்கூட மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.

கால காலத்துக்கும் நீடித்து நிற்க வேண்டியது: ஒரு மழைக்கே தாக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன சொல்வது? யாரை நோவது? யாரைத்தான் கேட்பது?

இப்போது அவர்களே சீரமைப் பணியிலும் இறங்கிவிட்டார்கள்.

ஆற்று நீரில் மீண்டும் அடித்துச் செல்லாமல் இருக்க சேற்று மண்ணால் அணைக்கும் முயற்சிகளும் இரண்டு, மூன்று பொக்லைன் இயந்திரங்களுடன் வேகமாக நடந்து வருகின்றன.

இதுவும் எத்தனை மழைக்குத் தாக்குப்பிடிக்கும்? என்று கேட்டு விடாதீர்கள்.

நாம் இந்த ஆற்று மண்ணில் மன்னிக்கவும் சேற்று மண்ணில், ஆற்றுத் திருவிழாவைக் கொண்டாடலாம்.
                                                            
 

                                                                           
 

                                                                           

பெண்ணையாற்றில் மணல்தான் இல்லை. இந்த மண்ணுக்காவது ஏற்பாடு செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி..!


(இணைப்பில் இருக்கும் புகைப்படங்கள் நேற்று (12.01.16) காலை எடுக்கப்பட்டவை)