‘வரலாம் வரலாம்...
வா வா...’ - வாயில்
விசில் வைத்தபடி கண்டக்டர் ‘ரைட்’
கொடுத்துக் கொண்டிருப்பார்.
பஸ், பின்னால்
வந்து கொண்டிருக்கும். அப்போது டமாரென்ற சத்தம். அந்த பஸ் இன்னொரு பஸ்மீது
மோதிவிட்டது.
அந்த டிரைவர் இறங்கிவர,
இந்த டிரைவர் இறங்கிச்செல்ல அடுத்த சில நிமிடங்களில் அந்த இடம்
போர்க்களமாகிவிடும்.
இது
சினிமாக்களில் காட்டப்படும் காட்சிகளல்ல. விழுப்புரம் நேரு சாலையில் இயங்கிவந்த
(பழைய) பேருந்து நிலையத்தில் அன்றாடம் நடந்து வந்த நிகழ்வுகள் தாம்.
90களின்
தொடக்கத்தில் தினகரனில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டேன். தலைப்பு ‘குண்டு
சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறார்கள்’.
பேருந்து நிலையத்தின்
கிழக்கில் உள்ளூர் பேருந்துகள். மேற்கில், தொலைதூரப் பேருந்துகள் நிற்கும்
‘திருவள்ளுவர் பஸ் ஸ்டான்டு’.
இப்போது நினைத்தாலும்
மலைப்பாக இருக்கிறது. இந்தச் சிறிய இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டப்
பேருந்துகள் தினமும் வந்து சென்றிருக்கின்றன!
1930இல் விழுப்புரம்
ஐயனார்க் குளக்கரைதான் மோட்டார் பேருந்துகள் (டிராம்) நிறுத்துமிடமாக இருந்தது. அப்போது
இயங்கிய வண்டிகளின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்துதான்.
தொடர்ந்து
25.08.1951இல் ‘முனிசிபல் பஸ் ஸ்டேஷனு’க்கு
உள்ளூர் நிர்வாகத்துறை அமைச்சர் சந்திரமௌலி அடிக்கல் நாட்டியிருக்கிறார். அடுத்த
சில மாதங்களில் நேரு சாலையில் இந்த நிலையம் இயங்கத் தொடங்கியிருக்கிறது.
அண்ணாவின் மறைவினைத்
தொடர்ந்து 13.08.1969இல் பேருந்து நிலையத்திற்கு, ‘அறிஞர் அண்ணாதுரை நகராட்சிப்
பேருந்து நிலையம்’ எனப் பெயர்
சூட்டப்பட்டது.
80,90களில்
பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் இடநெருக்கடியும் ஏற்பட்டது.
பேருந்து நிலையத்தை
பூந்தோட்டம் ஏரிக்கு மாற்றுவதற்கு யோசிக்கப்பட்டது.
இதற்கிடையே 1991இல்
ஏற்பட்ட அதிமுக தலைமையிலான அரசு, பூந்தோட்டம் குளத்தை பஸ்நிலைய விஸ்தரிப்புக்குப்
பயன்படுத்தியது. ஆனால் இத்திட்டம் முழுமைப் பெறவில்லை.
இதற்கிடையே திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையத்திற்கு 08.06.1998இல் நடந்த விழாவில், முதல்வர்
கலைஞர் அடிக்கல் நாட்டினார்.
விழுப்புரம்
நகராட்சியின் புதிய பஸ்நிலையத்தை 09.06.2000இல் முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.
இப்போது
பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது விழுப்புரம் புதிய பஸ் நிலையம்.
‘டமாரென்ற’
சத்தத்திற்கு எல்லாம் இங்கு இடமில்லை. ஆனால் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதங்கள்
தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
கேட்டால் ‘டைமிங்’
தகராறு என்கிறார்கள்..!