திங்கள், 27 ஜூன், 2016

அவசியம் தேவை :அருங்காட்சியகம்

வரலாற்றுத் தொன்மையும் பெருமையும் கொண்டது விழுப்புரம் மாவட்டம்.
மண்ணுக்குள் புதையுண்டிருக்கும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டுமே? இதற்காக அரசு சார்பில் அருங்காட்சி யகம், மாவட்டத் தலைநகரில் அமைக்கப்பட வேண்டும் என்பது என்னைப் போன்றோரின் நீண்ட நாள் கனவு.
இதனை வலியுறுத்தி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பேசியும், எழுதியும் வருகிறேன்.
இந்தக் கனவு நனவாகும் வாய்ப்பு, 2005இல் ஏற்பட்டது.
ஆம், அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இதுபோன்ற விசயங்களில் மிகவும் ஆர்வத்தோடு இருந்தார்.
அவரிடம் அருங்காட்சியக விவகாரத்தை எடுத்துச் சொன்னேன். “ஆமாம். அவசியம் தேவைதான்என ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பான அடிப்படை விவரங்களுக்காக என்னை கடலூர் அரசு அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தார்.
நான் அங்கு சென்று வந்தபிறகு, கடலூர் காப்பாட்சியர் திரு.காளத்தி விழுப்புரம் வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.
இதற்கிடையே பொதுமக்களிடமிருந்து கோரிக்கைப் பெறப்பட வேண்டும் என்று கல்வெட்டாய்வாளர் திரு.அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூர்த்தி யோசனை தெரிவித்தார்.
இதன்பேரில் மனுவொன்று தயார் செய்து, விழுப்புரத்தில் இயங்கிவரும் இலக்கிய, வரலாற்று அமைப்புகளைச் சேர்ந்த 15 பேரிடம் கையொப்பம் பெற்றேன்.
இந்த மனுவானது 02.08.2005இல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. 



இதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அருங்காட்சியகம் தொடர்பானக் கருத்துரு அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், விழுப்புரத்தில் காலியாகக் கிடக்கும் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக அருங்காட்சியகத்தினை அமைத்துவிடலாம் என்பது மாவட்ட ஆட்சியரின் யோசனையாக இருந்தது.
13.08.2005 அன்று விழுப்புரத்தில் நடந்த ஆட்சிமொழிக் கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் திரு.சி.வி.சண்முகத்திடம் மாவட்ட ஆட்சியர் இதுபற்றி எடுத்துச் சொன்னார். அமைச்சரும் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.
“விழுப்புரம் திரு.வி.க. வீதியில் தாலுகா அலுவலகம் இயங்கிவந்த இடத்தில் தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்படும்எனும் அறிவிப்பினையும் அமைச்சர் வெளியிட்டார்.



அரசின் உயரதிகாரிகள் எல்லாம் அந்த இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். வரைபடங்கள் எல்லாம் தயாராயின.
வெண்ணெய் திரண்டு வந்த இந்த நிலையில்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அருங்காட்சியகப் பணிகள் முடங்கின. தேர்தல் முடிவில் ஆட்சி மாற்றம். ஆட்சியரும் மாற்றம்.
தாழி உடைந்தது. கனவும் கனவாகவே இருக்கிறது.
சரி, மீண்டும் முயற்சிக்கலாமே நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
மேற்கண்ட முயற்சியில் இறங்கி, நான் எடுத்துக் கொண்ட சிரத்தை, அலைந்த அலைச்சல் சொல்லி மாளாது. இவை என்னைச் சோர்வடைய வைத்தன. ஆனாலும் தொடர்ந்தேன்.
அதனால்தான் அந்த மனுவைப் பெறும்போது மாவட்ட ஆட்சியர் கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். சொன்னார்,
“கண்ணகிக்குக் கோட்டம் அமைய சேரன் செங்குட்டுவன் எப்படி காரணமோ, அதுபோல் விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைந்தால் அதற்கு செங்குட்டுவன் காரணமாக இருப்பார்.
என்னுடைய உழைப்பை அனுபவ பூர்வமாக உணர்ந்தவர் எனும் காரணங்களினால் தான் ஆட்சியரிடமிருந்த இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்திருக்க வேண்டும்.
சரி, நான்தான் தொடரவில்லை. மற்றவர்கள் இவ்விவகாரத்தைத் தொடரலாமே?

இணைப்பில்:
04.08.2005 தினமலர் (புதுச்சேரி பதிப்பு)

21.08.2005 நம் தினமதி (திருவண்ணாமலை பதிப்பு)