தமிழக அரசியல்
இப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது...
செம்பரம்பாக்கம்
ஏரியை மையம்கொண்டு!
ஊடகங்களில்
தொடர்ந்து அடிபடும் ஒரு பெயராக மாறிவிட்டது இந்த ஏரி.
கடந்த ஆண்டு மே
மாதம் 15ஆம் தேதி, பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர்
செல்லும் சாலையில், அடையாற்றங்கரையில் பயணித்தோம், நானும் பொறியாளர் மு.இரமணி
அவர்களும்.
அதோ மேற்கே சுமார்
ஒரு கி.மீ.தூரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி.
சாலையில்
நாங்கள் காரை நிறுத்திய இடத்தில், நீரை அளக்கும் ஒரு அளவுகோல் நடப்பட்டிருந்தது.
ஏரியில் தண்ணீர் இவ்வளவு தூரம் வருமா? யோசித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன்.
வயல்
வரப்புகளின் வழியே நடந்து கொண்டிருந்தபோது திடீரென கால்வாய் ஒன்று குறுக்கிட்டது.
ஒரே ஜம்ப். குதித்துத் தாவினேன்.
குறுக்கிடும்
தார் சாலையைக் கடந்ததும் செம்பரம்பாக்கம் ஏரி.
மதகுகளில்
அருகிலேயே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகமாக ஏறத் தொடங்கினேன்.
அதற்கும்
முன்பாகக் குறுக்கிட்டது, கன்னியம்மன் ஆலயம்.
ஆம், ஏரிக்குள்
பாதாளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கோயில். இறங்கிச் செல்வதற்கும் படிக்கட்டுகள்
அமைக்கப்பட்டிருந்தன.
கோயிலுக்கு
வெளியே இருந்த கம்பியில் நூற்றுக்கணக்கான
வண்ண
வண்ணத் துணிகள். வேண்டுதலுக்காக மக்களால் சுற்றப்பட்டிருந்தன.
நீரிடந்
தெய்வம். வணங்கத்தக்கதுதான்!
மேல்தளத்துக்குச்
சென்றபோது பிரம்மாண்டமான செம்பரம்பாக்கம் ஏரி, என் கண்முன் விரிந்துக்
காணப்பட்டது.
இந்த ஏரி
வெட்டப்பட்டக் காலம் தெரியவில்லை. பல்லவர் காலத்தியதாக இருக்கலாம்?
இதன் பரப்பளவு
6,250 ஏக்கராகும். இதில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் மூலம் 50ஆயிரம் கன அடி வரை
தண்ணீர் திறந்துவிடலாம்.
இன்றைய
அணைக்கட்டுகளுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி.
சென்னை
மக்களின் தாகத்தைத் தணிக்கும் நீராதாரங்களில் ஒன்று.
கண்டலேறு
அணையில் இருந்துத் திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதிநீரின் ஒரு பகுதி, பூண்டி
அணையில் இருந்துக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியை அடைகிறது.
இங்கிருந்து
வெளியேறும் உபரிநீரானது அடையாற்றில் கலந்து குன்றத்தூர், திருநீர் மலை,
மணப்பாக்கம், ராமாபுரம், ஜபார்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக
வங்காள விரிகுடாவை அடைகிறது.
ஏரியில்
இருந்து வெளியேறும் நீர் செல்வதற்கானத் தடம்?
வரும் வழியில்
நான் தாண்டி வந்ததாகச் சொன்னேன் அல்லவா, அந்தக் கால்வாய் தான் இந்நீர்வழித் தடம்.
சரி, அடையாற்றுடன்
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டுமா கலக்கிறது?
ஸ்ரீபெரும்புதூர்
தாலுகாவில் உள்ள 96 ஏரிகளில் 50 ஏரிகளின் உபரி நீரும், பாப்பான் கால்வாய்,
திருமுடிவாக்கம், ஊரப்பாக்கம், மணப்பாக்கம் கால்வாய்களும் அடையாற் றுடன்
இணைகின்றன.
2015 டிசம்பர்
1ஆம் தேதியன்று என்ன நடந்தது?
தொடர் மழை காரணமாக
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து 35ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.
இதனால் அன்றைய
தினம் காலை 10ஆயிரமும், பிற்பகல் 20ஆயிரமும், இரவு 35ஆயிரம் கன அடி தண்ணீரும்
திறந்துவிடப்பட்டது. அதே நேரம் அடையாற்றுடன் இணைக்கப்பட்டிருந்த ஏரிகளில் இருந்து
32ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேறியது.
இந்த ஆற்றின்
கரைகள் 60 மீட்டர் அகலம் கொண்டவை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 10 மீட்டராகச்
சுருங்கிவிட்டது.
அடையாற்றைப்
பொறுத்தவரை 60ஆயிரம் கனஅடி வரை தண்ணீரைத் தாங்குமாம்!
ஆனால் ஒரே
நேரத்தில் 67, 70ஆயிரம் கனஅடி என்றால் அதுவும் சுருங்கியக் கரைகளைக் கொண்டு, எப்படித்
தாங்கும்?
அடையாற்றில்
கரைபுரண்டோடிய வெள்ள நீர், சென்னையைச் சுற்றியுள்ள சுமார் 80 கி.மீ. சுற்றளவில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து வெளியேறிய நீர் என்கின்றன பத்திரிகைச் செய்திகள்.
ஆனாலும் சென்னையின்
சேதத்துக்குச் செம்பரம்பாக்கம் ஏரிதான் காரணம் எனத் தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
சென்னை மக்களின்
வரமாக இருந்த இந்த ஏரி, இப்போது சாபமாக மாறிவிட்டது.
இதற்கெல்லாம்
இங்கு உறையும் கன்னியம்மன்தான் பதில் சொல்ல வேண்டும்..!