திங்கள், 30 நவம்பர், 2015

திருநாதர்குன்று

விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக, செஞ்சிப் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத் தடயங்கள் ஏராளமாக உள்ளன.

திருநாதர்குன்று அமைந்துள்ளப் பகுதி சிறுகடம்பூர் என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும் செஞ்சி நகரின் ஒரு பகுதியாகும்.


இந்தக் குன்றின் மீதுள்ள பிரம்மாண்டப் பாறையில் சமண முனிவர்களான 24 தீர்த்தங்கரர்களும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர்.

இச்சிற்பத் தொகுதியின் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு.

தமிழகத்தில் கழுகுமலைக்கு அடுத்து இங்குதான் 24 தீர்த்தங்கரர்களும் ஒரே சிற்பத் தொகுதியில் காணப்படுகின்றனர்.

இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில், “ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது சந்திரநந்தி எனும் சமண ஆசிரியர் ஐம்பத்தேழு நாள் உண்ணா நோன்பிருந்து இங்கு உயிர்நீத்துள்ளார். இக்கல்வெட்டில்தான் முதன் முதலாக உயிர் எழுத்தில் ஒன்றான “ஐ“ இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30நாள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது.



இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-6ஆம் நூற்றாண்டுகளாகும்.

இந்த இடம் தொல்லியல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறது.



வரலாற்றுக் குறிப்புகளைச் சொல்லும் தகவல் பலகைகள், வரலாற்றை நன்கு அறிந்தவர்களால் இதற்குமேல் யாருக்கும் வேண்டாம் என்று அகற்றப்பட்டுவிட்டன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக