சங்கராபரணி ஆறு என்றழைக்கப்படும் வராக நதி. செஞ்சிப் பகுதியில் உற்பத்தியாகி, புதுவை அருகே கடலில் கலக்கிறது.
இதற்கு செஞ்சியாறு, அரியாங்குப்பத்தாறு போன்ற பெயர்களும் வழிநெடுகிலும் வழங்கப்படுகிறது.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்திப் பெரிது என்பார்கள். இந்த ஆறு ஓடும் தூரம் மற்ற ஆறுகளைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், இதன் புகழ் உலகளாவியது.
அரியாங்குப்பத்தாறு கரையில் அமைந்துள்ள அரிக்கமேட்டின் சிறப்புகளை நாம் அறிவோம்.
இதே போல் சுத்துக்கேணி, பாகூர், முத்தரையர் பாளையம், கோரிமேடு உள்ளிட்டப் பகுதிகளில் தொல் பழங்காலச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருவக்கரை...
தமிழகத்தின் எல்லையில் புதுவையை ஒட்டிய கிராமம்.
நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் போற்றிப் பாடியுள்ளத் தலம்.
கோச்செங்கட் சோழனால் செங்கல்லால் கட்டப்பட்ட சந்திர மௌலீசுவரர்க் கோயில், முதலாம் இராஜராஜனின் 16வது ஆட்சியாண்டில் (கி.பி.1000-1001) கற்றளியாக மாற்றப்பட்டது.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சிவாலயங்களில்தான் விஷ்ணுவும் இடம் பெற்றிருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கது திருவக்கரை.
இத்தலத்தில் வீற்றிருக்கும் வக்கிர காளியையும், குண்டலினி முனிவரின் ஜீவ சமாதியையும் உலகறியும். தலச்சிறப்புகளைப் பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.
இப்போது இம்மண்ணின் மாண்பை பார்ப்போம்!
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவக்கரை, முருக்கேரி பகுதிகள் கனிம வளம் நிறைந்தவை.
இக்கிராமங்களில் 40 மீ அகலமுள்ள கருப்புக் கல் தொடர்கள் 16 மைல் தூரத்திற்கு பூமியில் நீண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.
1881ஆம் ஆண்டு சோனராட் எனும் ஐரோப்பிய விஞ்ஞானி திருவக்கரைக்கு வந்தார்.
வராக நதிக்கரையோரம் இருந்த மேடும் பள்ளமுமான அந்தப் பகுதியை ஆய்வு செய்த அவர், இயற்கையில் அற்புதமான கல் மரங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாள் முதல் திருவக்கரை உலக வரை படத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தது.
இங்குள்ள கல் மரத்துண்டுகளின் வயது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை கடலூர் மணற் கல் தொகுப்பைச் சேர்ந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இயற்கையின் சீற்றத்தில் புதையுண்ட மரங்கள், படிமங்கள் மீண்டும் நிலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களால் புதைவிலிருந்து மேலே வந்திருக்கலாம்.
‘இக்காலத்தில் உள்ள புன்னைக் குடும்பம், கட்டாஞ்சிக் குடும்பம், முதிரைக் குடும்பம், ஆமணக்குக் குடும்பம் ஆகியவற்றை சேர்ந்த இனங்களும் இந்தக் கல்லுரு தாவரங்களில் இருந்திருக்கக் கூடும். புளிய மரத்தையொத்த மரமும் காணப்படுவதாக” இங்குள்ள அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.
திருவக்கரை கல் மரங்கள் சென்னை அருங்காட்சியகம் மற்றும் சாத்தனூர் கல் மரப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அறிவியல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை பாதுகாத்திட 1957ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியப் புவியியல் துறையின் சார்பில் தேசியப் பூங்கா (கல்மரங்கள்) தொடங்கப்பட்டது.
திருவக்கரைக் கோயிலுக்கு வரும் பலரும் கல்மரப் பூங்காவைப் பார்க்க பிரியப்படுகின்றனர். ஆனால் எங்கிருக்கிறது? எந்தப் பக்கம் செல்வது? வழிகாட்டும் பலகைகள் எதுவும் கிடையாது.
ஊருக்கு வழியைக் கண்டுபிடித்துச் செல்வது போல நாமும் கண்ணில் தென்படுபவர்களிடம் எல்லாம் வழி கேட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.
பல நாடுகளில் செயற்கைக் கல் மரங்களைக்கூட கண்ணாடி பேழையில் வைத்து (வைரம் போல்) பாதுகாக்கிறார்களாம்.
ஆனால் இங்கு இயற்கையிலேயே கிடைக்கக் கூடிய கல் மரங்களை பாதுகாக்க வேண்டிய நினைப்பு நமக்கு இல்லை.
பல வீடுகளில் துணி துவைக்கும் கல்லாக இவை பயன்படுத்தப்பட்டு வந்ததை, திருவக்கரையைச் சுற்றி வரும் போது நான் பார்த்தேன்.
இங்கிருக்கும் “அரிய கல் மரத்துண்டுகளை யாரும் எடுத்துச் செல்லக் கூடாது” என்று எச்சரிக்கிறது கல் மரப் பூங்காவின் அறிவிப்புப் பலகை.
ஆனால் சாலையின் ஓரங்களிலும் இக் கல்மரங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதை நாம் பார்க்கலாம்.
ஏற்கனவே கல் குவாரிகள் எனும் பெயரில் ஏராளமான கல் மரங்கள் வெட்டியெடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.
இருக்கும் கல் மரங்களையாவது காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும், உள்ளூரில் இருப்பவர்களுக்கும், இதை உலகறியச் செய்யும் மத்திய அரசின் புவியியல் துறைக்கும் இருக்கிறது.
ஆனால், நீயா நானா எனும் பட்டிமண்டபம்தான் திருவக்கரையில் நடந்து வருகிறது!
திருவக்கரை:
விழுப்புரத்திலிருந்து முண்டியம்பாக்கம் வழியாக புதுவை சாலையில் 15கி.மீ. பயணித்தால், திருமங்கலம் கிராமத்தை அடையலாம். அங்கிருந்து வடக்கில் 7வது கி.மீ.இல் இருக்கிறது. திருமங்கலத்தில் இருந்து ஆட்டோக்களும் செல்கின்றன. திண்டிவனத்தில் இருந்தும், புதுவையில் இருந்தும் திருவக்கரைக்குச் செல்லலாம்.