திங்கள், 30 நவம்பர், 2015

ஜம்பைக் கல்வெட்டு

ஜம்பை.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூரில் இருந்து 21ஆவது கி.மீ. அமைந்துள்ள சிற்றூர்.

வாலையூர், நித்த வினோதபுரம், இராசேந்திரபுரம் எனும் பெயர்கள் இந்த ஊருக்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன, இங்குள்ள கல்வெட்டுகள்.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் “சண்பை“ என்றழைக்கப்பட்ட இவ்வூர், தற்போது வடமொழிக் கலப்புடன் “ஜம்பை“ எனப்படுகிறது.

இத்தலத்து இறைவன் ஜம்புநாதர். இக்கோயில் முதலாம் பராந்தகன் காலத்தில் எடுக்கப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த ஊரில்தான் அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதியமான் நெடுமான் அஞ்சி குறித்து, குறிப்பாக, மலையமான் திருமுடிக்காரியை அவன் வென்றதை சங்க இலக்கியங்கள் புகழ்ந்துரைக்கின்றன.

நிற்க.

மௌரியப் பேரரசன் அசோகனதுக் கல்வெட்டுகள் சோழர், பாண்டியர், கேரள புத்ரர் மற்றும் ஸத்ய புத்ரர் குறித்துப் பேசுகின்றன. இதில் குறிப்பிடப்படும் “ஸத்ய புத்ரர்“ என்போர் யார்? எனும் வினா, வரலாற்றுலகில் நீண்டநாள் நிலவிவந்தது.

இதற்கு விடை கண்டறிந்தவர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கல்வெட்டியல் பயிற்சி நிறுவன மாணவராக இருந்த செல்வராஜ்.

1981 அக்டோபரில் ஜம்பைக் குன்றில், தாசிமடம் என்றழைக்கப்படும் இயற்கையான குகைத் தளத்தில் இந்தக் கல்வெட்டினை அவர் கண்டறிந்தார்.

சமண முனிவர்களுக்குக் கற்படுக்கைகள் செய்வித்துக் கொடுத்த அரசனை அந்தக் கல்வெட்டு இப்படிக் குறிப்பிடுகிறது “ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி.


ஜம்பைக் கல்வெட்டினை முதன்முதல் பார்வையிட்டு ஆய்வுசெய்த டாக்டர்.இரா. நாகசாமி, “இந்தக் கல்வெட்டின்முன் நின்றபோது, அதியமான் நெடுமான் அஞ்சியே தம்முன் உயிர்பெற்று நிற்பது போன்ற பிரமை தமக்கு ஏற்பட்டதாகத்“ தெரிவிக்கிறார்.

“ஜம்பைக் கல்வெட்டின் காலம் கி.மு.270 - கி.மு.230 என்பார் ஆய்வாளர் நடன.காசிநாதன்.

“மாங்குளம், புகழூர், எடக்கல், ஜம்பை முதலிய இடங்களில் கிடைத்த தமிழ்-பிராமி கல்வெட்டுகள் தமிழக வரலாற்றை சங்க இலக்கியங்களுடன் ஒப்புநோக்கி ஒரு நிலையான கால எல்லைக்குள் வைக்க அடிப்படையாயினஎன்கிறார் ஆய்வாளர் கா.இராஜன்.

ஜம்பைக் கல்வெட்டின் மூலம் அசோகன் குறிப்பிடும் “ஸத்ய புத்ரர்கள், அதியமான்கள் தாம் எனத் திட்டவட்டமாகத் தெளிவாகிவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜம்பைக் கல்வெட்டு,

அண்மைக் காலத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது.

மகிழ்ச்சி.


முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதனைக் கண்டுபிடித்த திரு.செல்வராஜ் குறித்தும் ஆய்வுலகம் பேச வேண்டும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக