தாய்வழிச் சமூகமே
உலகின் தொன்மை வாய்ந்த மனிதக் குழுக்கள் என்கின்றனர் மானிடவியல் ஆய்வாளர்கள்.
தமிழர்களும்
இத்தகைய தாய்வழிச் சமூகத்தினர்தான்.
இதற்கான ஆதாரத்தைக்
காண்பதற்கு உடையாநத்தம் கிராமத்துக்குப்போக வேண்டும்.
இங்குள்ள
காப்புக் காட்டிற்குள்தான் அந்த வரலாற்றுத் தடயம் ஒளிந்து கொண்டிருக்கிறது.
பிரம்மாண்டமாக,
கைகளை விரித்தாற் காணப்படும் இந்தத் தட்டையான ஒற்றைக் கல் பாறையை அந்தப் பகுதி
மக்கள் விசிறிப் பாறை என்றழைக்கின்றனர்.
“இது தாய்த் தெய்வ வழிபாட்டின் அடையாளம்” என்பார், ஆய்வாளர் டாக்டர்
இரா.நாகசாமி.
“இது கீழ்வாலைப் பாறை ஓவியத்தில் இடம்பெற்றுள்ள தாய்த் தெய்வத்தின்
மூல உருவமாகவே தோன்றுகிறது” என்கிறார் பேராசிரியர் த.பழமலய்.
“இச்சிற்பம் கல்லில் செதுக்கிய
கடவுள் அன்னையின் உருவம்” என்பது
ஆய்வாளர் கே.வி.இராமனின் கருத்து.
உடையாநத்தம் விசிறிப் பாறையின் வயது 5000
ஆகும்.
இப்பாறைக்கு அருகில் பழைமைவாய்ந்த கல்திட்டைகள்
அதிகளவில் காணப்படுகின்றன.
இந்த இடம் பழமையின் பெருமை பேசினாலும்,
தொல்லியல் துறையின் அரவணைப்பு ஏனோ இன்னமும் கிடைக்கவில்லை!
விசிறிப் பாறைக்குக் கிழக்கில்,
மலையடிவாரத்தில் ஆத்திலியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இரண்டு பெரிய மரங்களுக்கு நடுவே, மூன்று
பட்டையானக் கற்கள் நடப்பட்டு, மேலே பலகைக் கல்லால் மூடப்பட்டுள்ளது. இதற்குள்தான்
ஆத்திலியம்மன் வாசம் செய்கிறாள்.
அந்த இடத்தைச் சுற்றிலும் சிறியதும் பெரியதுமான
சூலங்கள். மஞ்சள் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் துணிகள் சூலங்கள் மீது
சுற்றப்பட்டுள்ளன.
மண்ணால் ஆன குதிரை மற்றும் மனித உருவப்
பொம்மைகளும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் செலுத்தியக்
காணிக்கைகள் இவை.
உடையாநத்தம் காப்புக் காட்டிற்குள்
செல்வதற்கும் விசிறிப்பாறை மற்றும் ஆத்திலி அம்மன் கோயிலைப் பார்ப்பதற்கும், உள்ளூரைச்
சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலும் துணையும் தேவை.
உடையா நத்தம்:
விழுப்புரம்-திருவண்ணாமலைச் சாலையில்
கீழ்வாலைக்கு முன்னதாக 3 கி.மீ. வடக்கில் செல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக